
நிகழும் சனவரி 11, 12- 1-2024 ஆம் நாள்களில், தாய்த் தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை பெரும் பட்டணத்தின் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், சீரும் சிறப்புமாக நிகழ்ந்தேறின தமிழ்நாடு அரசு நிகழ்த்திய அயலகத் தமிழர் நாள் விழாக்கள்!
விழாவில், வட அமெரிக்காவில் இருந்து ‘தொன்மை தொடர்ச்சி’ என்கிற தலைப்பில் கவிதை பாட வந்த அழைப்பை ஏற்று தாயகம் சென்று, 22 -1-2024 ஆம் நாள் அட்லாண்டாவிற்குத் திரும்பினேன்.
மிகவும் குறுகிய காலக் கெடுவில் நான் மேற்கொண்ட பயணம் என்பதால் வீடு வந்த பின் இருந்த வேலைப் பளுவால் உங்கள் அனைவரையும் சந்தித்து பேசவும், வாய்ப்பிற்கு நன்றி நவிலவும் இவ்வளவு நாள் எடுத்துக் கொண்டேன். மன்னிக்க!
தமிழுக்காக மட்டும் ஒரு தனிப் பயணம் செல்ல வேண்டும். அங்கே தமிழைத் தவிர வேறு எதைப் பற்றிய எண்ணமும் இருக்கக் கூடாது என்ற கனவு சென்ற ஆண்டு முழுக்க என் உள்ளத்தின் கனவாகிக் கனன்று கொண்டிருந்தது!
நான் இரு பிள்ளைகளின் தாய், மனைவி, ஓர் அலுவலகத்தில் பணி புரியும் பணியாளர், இத்தனைக்கும் மேல் இந்த சமுதாயத்தின் பார்வையில் ஒரு பெண்.
இத்தனை அடையாளங்களையும், பொறுப்புகளையும் கடந்து எனக்கான ஒரு தனிப் பயணத்தை என்னால் நினைத்து கூட பார்க்க இயலவில்லை. மற்றவர்களுக்கு இது எளிதாகக் கூட இருக்கலாம். என்னளவில் இது ஒரு பெரிய, நான் எட்டிப் பறிக்க இயலுமா என நினைத்த எட்டாக் கனிதான்!
அயலகத் தமிழர் நாள் விழா, ஓர் அழகான, அரிதான நிகழ்வு.
அதனைக் குறித்த சமூக ஊடகச் செய்திகள் அனைத்தையும் கண்ணுற்றுக் கொண்டு அமைதியாக இருந்தேன். என் அமைதிக்கு காரணம் இரண்டு. நான் 2023 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் வரும் ஆண்டிற்கான என் படைப்பாற்றலுக்குத் தீனியாக, புளோரிடாவின் கடற்கரைகளை ஒட்டி ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்டு காட்சிகளை பருகி விட்டு மீண்டும் சனவரி 2 ஆம் நாள் தான் பணியில் இணைந்திருந்தேன்.
மற்றொன்று என் மகளின் பிறந்தநாள் சனவரி 12! அதனால், கனவில் கூட அந்த நாளில் அவளை விட்டுப் பிரிய நான் எண்ணவில்லை.
இந்தச் சூழலில் தான், தமிழக அரசின் அந்த அழைப்பு வந்தது. இது நான் கண்ட தமிழ்க் கனவு!
என் தமிழின் வேட்கை தணிக்கக் கிடைத்த பெரும் கடலாக அதனை எண்ணினேன். ஆனால் இத்துணை குறுகிய காலத்தில் எப்படி நான் செல்வது? மீண்டும் அதே சுமைகள் என்னை தளர்த்தின!
நிறைவாக, தமிழின் மேல் நான் கொண்ட காதல் அனைத்தையும் கடந்து என்னை வானில் பறக்கச் செய்தது, என் தாய்த் தமிழ்நாட்டைப் பார்க்கச் செய்தது!
முன்னம்
ஒரு நாள் முற்றத்தில்
யான் இருந்தேன்
மின்னல் கீற்றாய் அலைபேசி
சேதி சொல்லிச் சிணுங்கியது
தாய் நாட்டில் தனிப்பெரும்
நிகழ்ச்சி
செங்கோல் ஏந்திய எம் அரசரின்
எழுது கோல்களுக்கான அழைப்பு!
என் தமிழின் மேல் கொண்ட நம்பிக்கையால்
என்னை கவிதை பாடச் சொல்லி வந்த அழைப்பு!
பத்து நிமிடப் பேச்சுக்கு
பதினைந்தாயிரம் கல் தொலைவு
தாண்டி வரவேண்டுமா?
புத்தியில்லா இச்சிறுபெண்
எண்ணி முடிக்கையிலே
தலையில் கொட்டிச் சொன்னாள்
தமிழன்னை-
என் கையைப் பிடி கவிதையை வடி
சென்று வருவோம் நாம் என்றே!
இங்கே, தாய் வீடு விட்டுச் சென்ற மகவுகளை மீண்டும் அழைத்து, அள்ளி எடுத்து மார்போடு அணைத்துக் கொள்ளும் ஒரு தாயின் அன்பினைக் காட்டிய தமிழக அரசுக்கு முதற்கண் நன்றி!
கவிதை வழங்குமாறு என்னை வரவேற்று, என் பயணம் தொடங்கியது
முதல் முடியும் வரை பெற்றோரைப் போல் பார்த்துக் கொண்ட தமிழ் நாடு அரசுக்கும், நிகழ்வினை சீரும் சிறப்புமாக ஒருங்கிணைத்த அனைத்து அரசு செயலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி!
இத்தனைக்கும் மேலே உடனடிப் பயணம், பணி நெருக்கடி, அத்தனையும் தாண்டி என் மேல் கொண்ட பெரும் காதலால் தமிழ் பாட என்னை வழியனுப்பி வைத்த என் கணவருக்கும், என் பிள்ளைகளுக்கும் என் தலை தாழ்ந்த நன்றி!
பயணம் முழுவதும் என்னோடு இருந்து என்னை ஊக்குவித்த என் குடும்பத்தாருக்கும், உற்ற நண்பர்களுக்கும், சமூக ஊடக நண்பர்களுக்கும், இதழியல் நண்பர்களுக்கும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை நண்பர்களுக்கும், என்னோடு பங்கேற்று கவிதை பாடிய கவிஞர்களுக்கும், கவியரங்கத்திற்குத் தலைமை தாங்கிய கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும், என் கவிதையை ஆழ்ந்து செவிமடுத்துக் கேட்டு வரவேற்ற நூற்றுக் கணக்கான உலகத் தமிழ்ப் பேராளர்களுக்கும் இவ்வினிய வேளையில் என் உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்கி வணங்குகிறேன்!
இந்தப் பயணம், நான் உயிராகக் கருதும் என் தாய்த் தமிழ் மொழி எனக்கு கொடுத்த பெரும் பரிசு!
தமிழினை நம்பினோர், தமிழை நேசிப்போர் கைவிடப்பட மாட்டார்கள்
என்பதை இப்பயணத்தில் நான் அழுத்தந் திருத்தமாக உணர்ந்தேன்.
அன்பு உறவுகளே… என்மேல் அப்பழுக்கற்ற அன்பு செலுத்தும் அன்பு நண்பர்களே உங்கள் அனைவருக்கும் இந்த மருத நிலத் தமிழச்சி கைக்கூப்பி நன்றி செலுத்துகிறாள்!
எப்போதும் எங்கும் தமிழ் என் உயிர் என்பேன்!
‘தமிழ் எங்கள் உயிர் என்பதாலே – வெல்லும்
தரம் உண்டு தமிழருக் கிப்புவி மேலே!’
-பாவேந்தர் பாரதிதாசன்
அன்புடன்,
மருதயாழினி
வட அமெரிக்கா, அட்லாண்டா
26-1-2024