அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் நல்வாழ்த்துகள்!

ஒரு மொழி அழிந்தால்! ஒரு இனம் அழியும்!

தமிழ் இனத்தைக் காக்க
தமிழைக் காப்பாற்றுங்கள்
தமிழர்களே!

*நாளைய தமிழர்களிடம் தமிழ்*

செம்புலப் பெயல் நீராய்
கலந்து கிடக்கின்றன எம் மொழியின் சொற்கள்
பீடு நடை போட்ட சொற்கள் பல
கரைந்து போயுள்ளன
காலத்தால் இன்று!

இருக்கும் சொற்களை அள்ளி
முடிந்து கொண்டு
தமிழ் அழகியவள் தன்னை
அழகுபடுத்திப் பார்த்துக்
கொள்கிறாள் காலவெளிக்
கண்ணாடியில்!

ஆங்காங்கே துருத்திக் கொண்டிருக்கும்
பிற மொழிச் சொற்களை
கொய்யச் சொல்லி கொஞ்சும்
பார்வை பார்க்கிறாள்!

அன்னைத் தமிழ்நாட்டின்
அழகில் மயங்கி
அந்நியர் மட்டுமா நம்மை
ஆண்டார்கள்?
அவர்கள்
மொழியுமல்லாவா நம்மை
ஆள்கிறது!

மணியும் பவளமுமாய்
இரு மொழி கலந்த
மணிப்பிரவாளம்
தமிழுக்கு நேர்ந்த கேடு
இழந்ததை மீட்க தமிழா
நீயும் மறந்ததைத் தேடு!

நல்ல தமிழ் நாளை வேண்டும்
நாம் இழந்த சொல்லை மீட்க வேண்டும்
பிள்ளை பேசத் தொடங்கும்போதே
பிழையற்றத் தமிழ் சொல்ல வேண்டும்!

பண்டையச் சொற்களைக்
கண்ணுறுவோம்
பயன்மறந்த முந்தையச் சொற்களை
மீட்டெடுப்போம்
தொன்மைத் தமிழ் மொழியை
தூறெடுப்போம்
நல்ல தமிழ் மொழியை
நாளைய தமிழருக்கு
அளிப்போம்!