
தமிழ் என் உயிர்!
தமிழ்!
எனது உயிர் அணுக்கள் அனைத்தும்
இடையறாது சொல்லும் சொல்!
என் இரத்த அணுக்கள் எல்லாம்
இடைவிடாது ஏந்திச் செல்லும்
மூச்சுக் காற்று!
நாவிலே என் தமிழ் மொழி
பிறக்கும் வேளை
ஓங்கி உயர்ந்த மலை முகடுகளின்
வெண்பனிக்கிடையே
சிறு செம்மலர் விரியும் வேளை!
பொங்கி ஓடும் ஆற்றில்
எம்பிக் குதிக்கும் மீன்களாய்
உள்ளம் மாறும் வேளை!
நீண்ட வேனிலில் வாடிக் கிடக்கும்
மேனியைத் தென்றல்
தீண்டும் வேளை!
இப்படியான
ஒப்பில்லா மொழியாளை
அன்னைத் தமிழாளை
என்றும் என் நாவில் ஏந்துவேன்!
தமிழ் என் உயிர் என்பேன்!
மருதயாழினி